மழையெனும் அழகி!

மழையே !
அழகியென இறங்கினாய் ஆகாயத்தில் இருந்து !

நீ வரும் செய்தி சொன்ன காற்றிற்குக் காது கொடுத்தேன்.
அக்கணமே என் மனம் மாறியதேனோடி !
உன் பொழிவைக் கண்டு நான் பயந்ததேனடி !
இலைகளைக் குடையென விரித்தேனே !
தூய்மையில் துயர் எழுமோ !
உன் துளிகளை எதிர்த்து நான் தோளில் கவசம் தாங்கியதேனோ !
ஏது நினைத்தேன் !
கோமாளிகளின் கோமகன் நானோ !

அவரவர் மதி தான் ஆயிரம் சதி செய்யினும்,
விதியின் பக்கம் தானே வெற்றி !

என் செருக்குச் சிம்மாசனம் சிதைய,
இலைகள் நிலை குலைய,
கவசங்கள் கரைய,
கிளைக்குயில்கள் குதூகலித்துக் குலவையிட,
என் அச்சத்தை துச்சமென உதறி,
என் உதிரமென உருமாறி,
வேர் தொட்டு உயிர் விதைத்தாயே !
மரமென ஆனேன் நான் !
மண்ணுலகில் உன் துதி பரப்ப !

உள்ளத்தின் கர்ப்பம்

உள்நுழைய ஒரு நொடி போதும்.
உருக்கொள்ள உலகம் சுற்றும் நேரம் ஆகுமோ !

ஒருவர் பின் ஒருவராய்,
எத்தனை போட்டி !
வருவதும், இருப்பதும், போவதுமாய் !
இங்கே இரட்டைச் சிசுவிற்கு இடம் ஏது !
இருப்பவர் விலகித்தான் இன்னொருவர் உள்நுழைவர் !

பெற்றெடுக்கும் வேலை இங்கில்லை !
உள்ளிருந்தால் தானே என்றும் இனிமை !

ஓரத்தில் ஓர் புன்முறுவலுடன்,
உடைந்து சிதறும் பயத்துடன்,
உள்ளங்கை அளவு கர்ப்பத்தில் உலகம் அழிக்கும் வலியா !

உள்ளம் கலங்குதடி !

மனமே

மலர்களின் மணம் புலன் பறிக்க
முட்களின் நுனிதான் நெருடுவதேனோ !

விண்மீன் கூட்டம் விழிகளில் பொழிய
வெண்மதி இன்மை வாட்டுவதேனோ !

கனவுகள் ஆயிரம் கண்முன் தெரிய
கவலைகள் இமைகளாய் மாறுவதேனோ !

கடலினில் அமைதி எழிலென நிலவிடினும்
கரையினை ஓடம் தேடுவதேனோ !

இன்பங்கள் பல கோடி இறைந்து கிடப்பினும்
இன்மைகள் சில இதயத்து இமயம் எட்டுவதேனோ !

எழுத எண்ணங்கள் எத்தனையோ இருப்பினும்
வரிகள் வலிகளை நாடுவதேனோ !

சொல் மனமே !

உள்ளங்கையில் உயிர்த்தோழி

 

வண்ணத்துப் பூச்சியின் சிறகில் வடிகட்டிய கதிர்கள்.
வண்டுகளின் எச்சத்தால் கர்ப்பம் தரித்த மலர்கள்.
வட்டம் இட்டு வாழும் வானவில்.
கோடிட்டு வீழும் கோடை அருவிகள்.
வான்குழலில் வாசம் செய்யும் நட்சத்திர ஈர்க்குவியல்.
வெட்க மிகுதியில் வெளிவராத வெண்ணிலவு.
கண்ணில் படாத காதலியாய்த் தென்றல்.
காற்றின் கதைக்குத் தலையாட்டும் இலைகள்.
ஓடக்கீறலால் உயிர் பெறும் நதிகள்.
உண்மை சொல்லத்தயங்கி உள்செல்லும் அலைகள்.

இவைபோல்,
காட்சிகள் பல,
என் கண்ணில் படக் காலம் தவமிருக்க,
என் கண்ணோ நின் முகம் கண்டது.
உயிர்த்தோழியே !

என் கண்ணின் உரிமைகள்,
என் மனத்து நிறைவுகள்,
புறக்கண்ணால் நீ பறித்தாய்,
ஓசையுடன் அதைச் சிமிட்டினாய்.

என் அகம் பறிகொடுத்தவற்றை,
நின் முகம் நிலையாய்க் காட்ட,
சிலையாக நான்,
மூச்சடக்கி மூர்ச்சையானேன்

தொடுதிரைத் தோழியே !!

பிறப்பு.

 

இருள் பழகிய வானம்.

இரவில் நெடு நேரம்.

இமை மூடாத நொடிகள்.

மௌனத்தில் மத்தளச் சத்தமாய் இதயத்துடிப்பு.

விண்ணிற்கும் மண்ணிற்குமாய் மூச்சுக் காற்று.

கண்ணாடியில் முகம் பார்க்க விரும்பாத கண்கள்.

நூறுமுறை அவ்வரிகள் சொல்லிப் பழகிய மனம்,

ஒரு முறை என் கைக்குக் கட்டளை இட்டதும்,

நில நடுக்கத்தில் பாதி என் விரல் நடுக்கம்.

உணர்வுகள் துடித்து உறைந்த ரத்தம்.

இதயத்தில் பிரசவ வலி.

 

கைப்பேசியின் ஸ்பரிசத்தில் உள்ளங்கை மழையாய் வியர்வை.

மனத்து எண்ணங்கள் தொடு திரையில் பதித்தேன்.

அவள் பக்கம் அனுப்பிவிட்டு உயிர்த்துளி நீத்தேன்.

முதல் குழந்தையாய் வெளிவந்தது காதல்.

 

பேனாமுனையில் எண்ணக் களைப்பின் வியர்வைத்துளி.

பட்டதும் பெண் போல் சிணுங்கிய காகிதம்.

ஒரு நிமிட புல்லரிப்பில் உதிர்ந்தது கவிதை.

இரட்டையரில் இரண்டாமவள்.

 

சுகப்பிரசவம்.

 

 

 

 

எழுத விடு கவிதையே.

 

ஒரு முறையாவது உண்மை சொல்கிறேன் கவிதையே.

எழுத விடு.

மோனையின் முக்காடும் வேண்டாம்.

எதுகையின் பாதுகையும் வேண்டாம்.

வாழ்வின் வாசம் தெளிக்க விழைகிறேன்.

வார்த்தைச் சுழலில் சுற்ற விடாதே.

கருத்தடக்கம் காண முயல்கிறேன்.

அடுத்த பக்கம் எட்ட நினைக்காதே.

பக்கம் நிரப்பும் பருவம் தாண்ட விருப்பம் இல்லையா ?

இரு வரியானாலும் என் வலி காட்டு.

எளிய மொழியில் இதயம் தொடலாம்.

ஆடையின்றி நடை போடு.

அகிலம் புரிந்து கொள்ளட்டும்.

ஒரு முறையாவது உண்மை சொல்கிறேன் கவிதையே.

உயிர் கொள் !

 

தூரம்…

 

நதிகளின் ஆழம்.

நரம்பணுப் பிணையம்.

வந்து சேராத இருண்மதி ஒளிக்கற்றை.

பங்குனிப் பகலவன் கிரணம்.

பால் வெளியைக் கோர்க்கும் நூல்.

சேர்த்துப் பார்த்தால்

அவள் என் விழியோரம் தாண்டும் தூரம்

அலைகடல் வாழ்க்கை.

 

வாழ்க்கை.

அது ஒரு கடற்கரை போலத்தான்.

அலைகள் பல வந்து போகும்.

சில உன் கால்கள் தொழும்.

சில உன் கரைகளை உடைத்தெரியச் செய்யும்.

நஞ்சு நீலத்து அலைகள் சில,

அருகில் வரின் வெண்முகம் காட்டி ஏமாற்றும்.

உடைந்தது போல் நடித்து உள்வாங்கும் வகையும் உண்டு.

 

இடர் இருள் வருங்கால் நிலவொளியில் மிளிர்ந்து வழி காட்டும் சில.

காரிருளாய்க் கண்ணுக்குத் தெரியாமல் போகும் சில.

ஒருவகை அலையும் இல்லாமல் கழிக்கும் அமைதி இரவும் உண்டு.

ஒவ்வோர் அலையும் உயரத்து வானம் கிழிக்கும் அமாவாசை இரவும் உண்டு.

வந்து போய் வாழக் கற்றுத்தரும் அலைகளின் மத்தியில்,

எந்த இடர் வரினும் இடம் மாறாத கலங்கரை விளக்கமாய்,

சிந்தைத் தெளிவெனும் ஒளிக்கதிர் நீண்டு உலகம் காட்ட,

வாழ்வாய் , இக்கடற்கரை வாழ்க்கையை..

 

பதுமையின் புதுமைப் பயணம்

 

கதறி அழுதாள்.

கனவுலகம் தாண்டி விட்டாள் போலும்.

கண் திறந்து பார்த்தாள்.

கருவறையிருள் விடிந்தது போலும்.

முலைப்பால் முகர்ந்தாள்.

கள்ளிப்பால் தாண்டிவிட்டாள் போலும்.

“கண்ணே மணியே” தாலாட்டு கேட்டாள்.

“சாபமே சனியனே” வசைகள் வென்றாள் போலும்.

ஏட்டுப் பையில் கையை வைத்தாள்.

வீட்டு வேலைகள் வீசி எறிந்தாள் போலும்.

மட்டைப்பந்தால் முச்சந்தியில் கோலம் போட்டாள்.

பூட்டிய கதவுகள் திறந்தன போலும்.

வாய்ப்புகள் வந்தால் வாவென்று அழைத்தாள்.

பூப்பெய்தலின் புனிதச் சிறைகள் உடைத்தாள் போலும்.

கல்லூரிக் காற்றில் உயிரை நனைத்தாள்.

காசுக்குறைவெனும் காரணம் சிதைத்தாள் போலும்.

பட்டம் வாங்கி எட்டம் கடந்தாள்.

மட்டம் பேசிய வாய்கள் வதைத்தாள் போலும்.

கணினியும் காகிதமும் கைதேர்ந்து ஆண்டாள்

கைவிலங்கனைய கட்டுக்கோப்புகள் உடைத்தாள் போலும்.

காதலும் கணவனும் ஒன்றெனக் கொண்டாள்.

சுதந்திரச் சுயம்வர உரிமை வென்றாள் போலும்.

விரும்பும் நேரம் விழுதுகள் இட்டாள்.

வீண் மரபுகள் விலக்கினாள் போலும்.

வித்தைகள் புரிந்து விமானம் செலுத்தினாள்.

பித்த மூடர் வார்த்தையின் எல்லைகள் கடந்தாள் போலும்.

அடிக்கோடிடும் அளவு தன் வாழ்வைச் செழித்தாள்.

வகுக்கும் கோடுகள் சுவடோடு அழித்தாள் போலும்.

பாரெலாம் சுற்றினாள்.

பார்வையில் விரிவு கொண்டாள்.

பாரதியும் கண்டிராத புதுமைகள் தொடுத்தாள்.

பார்மிசை யாவரும்,

புதுமைகள் யாவும் மரபெனக் கொள்ளும் நாள் வரை

மாற்றம் நோக்கி உழைத்தாள்.

உலகம் ஏற்றம் காண்பதற்கே..

உணர்வாய் மானுடா !

உனக்காக வாழ்.

உலகம் உற்றுப் பார்க்கும் – உளராதே !
உன்னை நீ உற்றுப்பார்.
ஒப்பனை செய்.
உனக்காக வாழ்.

வாய்ப்புகள் வாடிக்கை இழக்கும் – வாடாதே !
உன் வரையறைகளை விலக்கு.
வாய்ப்புகள் உருவாக்கு.
உனக்காக வாழ்.

நட்புகள் நகர்ந்து போகும் – நடிக்காதே !
நட்பும் நதியும் நிலைத்தல் அறியா.
உண்மை நிலை உணர்.
உனக்காக வாழ்.

பிடித்தது கிடைக்காமல் போகும் – பதறாதே !
உனக்குப் பிடித்த உயிர்களின் வரிசையில் மாற்றம் கொணர்.
உனதுயிர் முன்நிற்கட்டும்.
உனக்காக வாழ்.

கிடைத்தது பிடிக்காமல் போகும் – உதறாதே !
இதயத்தின் முடிவில் நம்பிக்கை வை.
எதிர்க்காதே, ஏற்றுப் பழகு.
உனக்காக வாழ்.

ஊர் உயர்த்திப் பேசும் – உருகாதே !
உன் மனதுள் உனைத் தாழ்த்து.
உயர்ந்து வளர்.
உனக்காக வாழ்.